கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் அபி சுந்தர்(17). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த கிராமமான பூலாம்பாடி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிச்சென்ற அபி சுந்தர், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரின் தொலைபேசி எண்ணிற்கு அவரது பெற்றோர் தொடர்பு கொண்டுள்ளனர். நீண்ட நேரமாக செல்போன் ஒலித்தும் யாரும் எடுத்து பேசவில்லை. அப்போது அந்த வழியாக வந்த வெங்கடேசன் என்பவர் தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார். அப்போது வெங்கடேசன், அபி சுந்தர் செருப்பு கழட்டி வைத்துள்ளதாகவும் அதனருகில் செல்போன் கிடந்ததாகவும் கூறியுள்ளார். அருகில் ஆட்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதையடுத்து சந்தேகம் அடைந்த அபி சுந்தரின் பெற்றோர், மகனை தேட ஆரம்பித்தனர் கிடைக்கவில்லை. இதையடுத்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் செல்போன் கிடந்த இடத்தை சுற்றிலும் தேடியுள்ளனர். சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இறங்கி தேடுவது என முடிவு செய்தனர். அதன்படி வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தபோது, அபி சுந்தர் கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். மேலும் அவர் உடலில் காயங்கள் இருப்பதால் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் வேப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அபி சுந்தர் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திட்டக்குடி டி.எஸ்.பி. சிவா விசாரணை நடத்தி உள்ளார். மேலும், போலீசார் அபி சுந்தரின் மரணம் குறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அபி சுந்தர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? யாராவது அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி விட்டு சென்றார்களா என பல்வேறு விதமான சந்தேகங்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். போலீஸ் விசாரணையின் முடிவில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உண்மை வெளிவரும் என்கிறார்கள் போலீசார்.