சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழா இன்று நடைபெற்றது, தரிசன விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் வெளியூர் பக்தர்கள் ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு பெற வேண்டுமென கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள், கீழ வீதியில் 28ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைனில் அனுமதி என்பதை ரத்து செய்யாவிட்டால் இன்று சாமியை தேர்களுக்கு கொண்டுவரப்படாமல் கோவில் உள் வளாகத்திலேயே சுற்றிவந்து ஆயிரக்கால் மண்டபத்தில் முன் முகப்பில் கொண்டு வைக்கப்படும். இதில் பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இது எங்கள் பொது தீட்சதர்கள் அவசர கூட்டத்தில் 28.12.2020 அன்று இரவு எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிக்கப்படுவதாக நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் டிரஸ்டி தங்கராஜ் தீட்சிதர், நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் உள்ளிட்ட அதிகாரிகள் கோவில் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் அவர்கள், ஆன்லைன் முன்பதிவு என்பதை ரத்து செய்தால் மட்டுமே தேரோடும். அதனையும் எழுத்து மூலமாக தர வேண்டும். இல்லையென்றால் ஓடாது என்று தெரிவித்தனர்.
அதற்கு அதிகாரிகள், நீதிமன்றம் திருவிழாவில் கலந்துகொள்பவர்கள் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் தாராளமாக சாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்தனர். இருந்தபோதிலும் தீட்சிதர்கள், இபாஸ் முறை ரத்து என்பதை எழுத்து மூலமாக கொடுக்க வேண்டுமெனத் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கூறியது போல் அதிகாரிகள் எழுதித்தரவில்லை. 28ஆம் தேதி இரவு முதல் 29ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முடிவு எட்டப்படாததால் அனைவரும் திரும்பிச் சென்றனர்.
ஆனால், திடீரென இன்று காலை தேர் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.