சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்தது.
பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வ குடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.அண்மையில் சுற்றுவட்டார கிராம மக்கள்' விவசாயத்தை அழித்து விமான நிலையமா?' என்ற பதாகைகளுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படுவோம் என்று கூறிய 13 கிராமங்களின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு அக்குழுவினரால் போராட்டம் ஏறக்குறைய 80 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
மேலும் சட்டப்பேரவை நடைபெறும் நாளான 17ஆம் தேதி அன்று கிராம மக்கள் அனைவரும் சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல இருக்கிறோம் என்று அறிவிப்பும் விடுத்திருந்தனர். இந்நிலையில் போராட்டக்குழுவினரோடு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக் குழுவினர், “அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு ஆகிய மூவரை சந்தித்து பேசினோம். உங்களுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தமாட்டோம் என்றும் நல்ல ஒரு தீர்வை நாங்கள் தருவோம் என்றும் கூறினர். அவர்களின் பேச்சுவார்த்தையில் ஓரளவிற்கு திருப்தி ஏற்பட்டு தற்காலிகமாக நாங்கள் செய்து கொண்டிருந்த போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாக போராட்டக்குழு முடிவு செய்துள்ளது” எனக் கூறினர்.