புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பெரியாளூர் விலக்கு சாலையில் திருமண மண்டபம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு விஐபி எஸ்கார்ட் வாகனத்தில் புதுக்கோட்டை ஆயுதப்படை, மூன்றாம் படைப்பிரிவு, 2ஆம் நிலை காவலர் சசிதரன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்து விஐபி எஸ்கார்ட்டு வாகனம் அறந்தாங்கி சாலையில் திரும்பும் போது எதிரே பெரியாளூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஒரு கார் இன்டிக்கேட்டர் போடாமல் வேகமாக திரும்பியதால் விபத்து ஏற்பட இருந்தது. இதனையடுத்து போலீசார், அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் இன்டிக்கேட்டர் போட்டு திரும்பி இருக்கலாமே என்று கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பெரியாளூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார்(42), நாவுக்கரசு(40) ஆகிய இருவரும் போலீஸ் வாகன ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த போலீஸ்காரர் சசிதரன், இதனை தட்டி கேட்டுள்ளார். அப்போது காவலர் சசிதரனையும், இரும்பு கம்பியை எடுத்து தாக்க முயன்று சீருடையை கிழிக்க முயன்றுள்ளனர்.
இதை தடுக்க வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகையா, காவலர் பிரசாந்த் ஆகியோரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளனர். மேலும், போலீஸ் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்து, அந்த கடைவீதியில் நின்ற குளமங்கலம் தெற்கு ராஜேந்திரன்(55) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராஜேந்திரன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரை தாக்க முயன்று, பணி செய்யவிடாமல் தடுத்ததாக காவலர் சசிதரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி போலீசார், ராம்குமார் மற்றும் நாவுக்கரசு ஆகிய இருவரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.