ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் மணி(50). இவர் அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையத்தில் கல்யாண ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். கல்யாணத்திற்கு தேவையான சமையல் பாத்திரங்கள், மைக் செட்டுகள், சாமியான பந்தல்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. கல்யாண ஸ்டோர் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வந்து பார்த்தபோது கடையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக மொடக்குறிச்சி தீயணைப்புத்துறை மற்றும் அரச்சலூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடையில் இருந்த 4 சிலிண்டர்கள் வெடித்தால் மேலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனையடுத்து, ஈரோட்டில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல், தீ மற்ற இடங்களில் பரவாமல் இருப்பதற்காக தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த மைக் செட், பந்தல், சாமியான பந்தல், சமையல் பாத்திரங்கள், டேபிள், சேர், இரண்டு டெம்போ, சிலிண்டர் என பல லட்சக்கணக்கான மதிப்பு பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. 4 சிலிண்டர்கள் விபத்தில் வெடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர நீண்ட நேரம் ஆகியது. இருப்பினும் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் அருகே உள்ள வீடுகளில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தடுக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.