கடந்த 13 ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் மாணவி சத்யப்ரியா என்பவர் சதீஷ் என்ற இளைஞரால் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.காம் படித்த மாணவி சத்யபிரியா. ஒருதலைக் காதல் விவகாரத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யாவை கடந்த 13 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் ரயில்வே ட்ராக்கில் தள்ளி விட்டதில் சத்யா சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். கொலையில் ஈடுபட்ட சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சதீஷை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார் சென்னை புழல் சிறையிலிருந்து பாதுகாப்பாக சதீஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து பல்வேறு விசாரணைகள் அவனிடம் மேற்கொள்ளப்பட்டது. பிறகு கொலை நிகழ்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று மாணவியை எவ்வாறு சதீஷ் கொலை செய்தான் என்பதை நடித்துக் காண்பிக்க வைத்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக சமர்ப்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாளை காலை 10 மணி வரை சதீஷை காவலில் விசாரிக்க அனுமதி உள்ளதால் பல்வேறு முறைகளில் சதீஷிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.