மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத சாதாரண, வாசமற்ற காகித பூவாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் வழக்கமான சாதாரண பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத, மக்களுக்கு ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இவ்வாண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. தமிழக அரசின் கடன் சுமை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போய், இப்போது 3.55 லட்சம் கோடியாக மிகவும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் வருவாய் 1.76 லட்சம் கோடி. தமிழக அரசின் கடனோ 3.55 லட்சம் கோடி. 3.55 லட்சம் கோடி ரூபாய்க்கான வட்டியால் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களையோ, அடிப்படை கட்டமைப்புகளையோ மேற்கொள்ள முடியாமல் அரசு கடன் சுமையால் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் பற்றாக்குறை 17 ஆயிரத்து 490 கோடியாக உள்ளது. இப்பற்றாக்குறையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது.
தமிழ்நாட்டிற்கு காவேரி நதிநீர் கிடைக்காததாலும், பருவமழை பொய்த்துப் போனதாலும், காவேரி டெல்டா பாசன பகுதிகள் மற்றும் மானாவாரி பகுதிகள் காய்ந்துக் கிடக்கின்றன. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அரசு அறிவித்திருக்க வேண்டும். குடிதண்ணீர், வேலை வாய்ப்பு, ஏரி குளங்களை தூர் வாரி ஆழப்படுத்த நிதி, விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் நிதியுதவி, விவசாயிகளின் வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் ரத்து போன்றவற்றிற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கி, மத்திய அரசிடம் நிதியுதவி பெற நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
சுமார் 1 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் காத்து கிடக்கின்றனர். புதிய தொழில்கள் தொடங்குவோரை ஊக்குவிக்க பெரிய, சிறிய, நடுத்தர தொழில்கள் தொடங்க கடன் மற்றும் மானியத்திற்கு வெறும் 600 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் பெரிய அளவில் என்ன தொழில் வளர்ச்சி ஏற்பட்டுவிடப் போகிறது ? வேலையில்லாமல் இருக்கிற இளைஞர்களுக்கு அவரவர் கல்வித் தரத்திற்கேற்ப உதவி தொகைகள் வழங்கவோ, வேலை வாய்ப்புகள் கிடைக்கவோ வழிவகை செய்யப்படவில்லை. சுகாதாரத்துறையில் ஏழைஎளிய,நடுத்தர மக்கள் பயன்பெறும் விதத்தில் டயாலிசிஸ் வசதிகள், அறுவை சிகிச்சை வசதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒன்றிய, தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். பள்ளிகள் இல்லாத கிராமங்களில் ஆரம்ப பள்ளிகள் ஏற்படுத்தவும், ஆரம்ப பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக அதிகளவில் தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
மொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை நிறைவேற்றிட தொலைநோக்கு சிந்தனையற்ற, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத சாதாரண, வாசமற்ற காகித பூவாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.