![Panchayat Secretary Sindhuja arrested in cuddalore panchayat leader case](http://image.nakkheeran.in/cdn/farfuture/29GwBPH5cm9tg9YBZyj0aW8F9fDycIFs_yzhr38HA3I/1602332239/sites/default/files/inline-images/vvff_0.jpg)
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 100 குடும்பங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். 600க்கும் மேற்பட்டோர் மாற்றுச் சமூகத்தினர் உள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார், ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் 1 உறுப்பினர் ஆதிதிராவிடர் மீதி 5 பேர் மாற்றுச் சமூகத்தினர்.
ஊராட்சித் தலைவர் ஆதிதிராவிடர் சமூகம் என்பதால் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றக்கூடாது என்றும் ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடைபெறும்போது ஊராட்சி தலைவர் மற்றும் ஆதிதிராவிட ஊராட்சி உறுப்பினர் தரையில் அமர வேண்டும் என்றும் துணைத்தலைவராக உள்ள மோகன் ராஜன் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த சுதந்திர தினத்தின்போது ஊராட்சி மன்றத் தலைவரை கொடி ஏற்றவிடாமல் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜா தடுத்து தாங்களே தேசியக்கொடியை ஏற்றி உள்ளார்.
இது சம்பந்தமாக இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி நேரில் விசாரணை செய்தார். இவர் நேரில் வந்து விசாரணை செய்வதற்கு முன்பாகவே ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.