ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வங்கூர் ஊராட்சிக்குட்பட்ட நாராயணக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கங்காதரன். இவரது மனைவி நதியா. இந்த தம்பதிக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், எட்டாம் வகுப்பு படிக்கும் ஜீவா என்ற ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜீவாவிற்கு வலது காலில் லேசாக புண் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த காயம் நாளடைவில் பெரியதாக உருவாகி வலது கால் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. ஜீவாவை அவரது பெற்றோர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அழைத்துச் சென்று காட்டியபோது, காயம் உள்ளுக்குள் அதிகமாகி கால் சேதம் அடைந்துள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து முட்டி வரை காலை அகற்ற வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, கண்ணீர் விட்டுள்ளனர். மகனின் உயிர் முக்கியம் என மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிறுவனின் கால் முட்டி வரை அறுவை சிகிச்சை மூலமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற சிறுவர்களைப் போல் வெளியில் செல்ல முடியாமல் ஜீவா வீட்டிலேயே முடங்கி கிடந்ததார். சிறுவனின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதும், அவன் பள்ளிக்கு செல்லும்போது பெரும் சிரமத்தை சந்தித்துள்ளார்கள். 13 வயது சிறுவனை தூக்கிக்கொண்டு சுமந்து செல்லும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
இதனைக் கண்ட அந்த கிராமத்தின் வங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி, சிறுவனுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரியில் இயங்கும் நான்கு சக்கர வாகனத்தை சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார். வரும் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தானும் மற்ற சிறுவர்களை போல் எவ்வித சிரமமும் இன்றி பள்ளிக்குச் செல்லப் போவதாக சிறுவன் ஜீவா மகிழ்ச்சி பொங்க கூறினார். தன் எதிர்காலம் முடங்கி விட்டதாக எண்ணி இதுநாள் வரை வீட்டில் முடங்கி கிடந்த சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஊராட்சி மன்ற தலைவரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சிறுவன் ஜீவாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் உதவிகளை செய்ய வேண்டுமென அவரது பெற்றோர்கள் ஆதங்கத்தோடு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.