தென்காசி மாவட்டத்தின் பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின பள்ளிக் குழந்தைகளிடம் ஊர்க் கட்டுப்பாடு என்ற வகையில் பெரும்பான்மைச் சமூகத்தின் நாட்டாமை தன் கடையில் அவர்களுக்கு தின்பண்டங்கள் தரமறுத்தது தொடர்பான வீடியோ வைரலானது.
இது குறித்து பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பதட்டம் காரணமாகவும், பொது அமைதியைப் பாதுகாக்கிற வகையிலும் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாதன், காரணமான 5 பேர்களையும் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பாஞ்சாகுளம் மற்றும் குறிஞ்சாக்குளம் கிராமங்களில் தொடரும் சாதிய பாகுபாட்டைக் கண்டித்து சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய தொல். திருமாவளவன், “விஞ்ஞானம் முன்னேறிய 21ம் நூற்றாண்டில் குழந்தைகளிடம் சாதிய பாகுபாடு காட்டியது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தமிழக வரலாற்றில் முதன் முறையாக 6 மாத காலம் ஊருக்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த சம்பவத்தில் கட்டுப்பாடு கொண்டு வந்த ஊர் நாட்டாமைகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீண்டகாலமாக உள்ள குறிஞ்சாக்குளம் பிரச்சனை குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வரும் விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நடத்தப்படாமல் இருந்த திருவிழாவை நடத்த முயற்சி செய்த 120 பேர், அங்கு வி.சி.க. கொடியை ஏற்றிய 40 பேர் என 160 பேர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நடத்துகிற அரசியல் ஆபத்தானது” என்றார்.