கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வல்லம்படுகை, வேளக்குடி, அகரம் நல்லூர், பழைய நல்லூர், நந்திமங்கலம் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி மூலம் விளைந்த நெற்களை விவசாயிகள் அறுவடை செய்துள்ளனர்.
அம்மாபேட்டையில் அமைக்கப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் வைத்துள்ளனர். இந்த நிலையில் சிதம்பரம் வட்டார பகுதியில் செவ்வாய்க் கிழமை இரவில் பெய்த மழையால் நெல் பட்டறை மற்றும் நெல் மூட்டைகள் நனைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது குறுவை சாகுபடி நெற்களை வாங்குவதற்கு அரசு சார்பில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மட்டுமே திறந்துள்ளனர். இதில் ஒரு நாளைக்கு 300 மூட்டை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், விவசாயிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகளைக் கொள்முதல் நிலையத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். எனவே இந்தப் பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை சம்பந்தப்பட்ட துறையினர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நனைந்த நெற்களின் விலையைக் குறைக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதியில் கூடுதலாக இன்னும் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டுமென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியிலுள்ள விவசாயி அத்திப்பட்டு மதிவாணன் தலைமையில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.