டெல்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெல், கடலை, சோளம், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால், அவை கொள்முதல் நிலையங்களிலேயே குவியல் குவியலாக மூடப்பட்டு இருந்த நிலையில், பல இடங்களில் அவை அனைத்தும் பயிராக முளைத்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்து குவித்து வைத்த நெல்லை மழை காரணமாகக் கொள்முதல் செய்யாததால், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அப்படியே மழையில் நனைந்து பயிராகி உள்ளது. மேலும் மழையில் நனைந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது.
இது குறித்து பி.ஆர்.பாண்டியன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம், உடனே நெல் கொள்முதல் செய்யக் கோரிக்கை வைத்த நிலையில், நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிஆர்.பாண்டியன்.. இது போன்ற நெல் பாதிப்புகளுக்கு அரசே முழு காரணம். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஈரப்பதம் இருந்தாலும் நெல் வாங்கச் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் இங்கே மழை காரணமாகக் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் குவித்து வைக்கப்பட்டு முளைத்து வருகிறது என்றார்.