
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரை பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள் போடப்பட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள தனி வீடுகளில் குறிவைத்து ஞானசேகரன் கொள்ளையடித்துள்ளார். 7 வீடுகளில் கொள்ளையடித்த நகைகளை விற்று சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை போட்டதாகவும் ஞானசேகரன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சிறையில் உள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஞானசேகரனிடம் ஜீப் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தார் ஜீப் மூலமாக வலம் வந்த ஞானசேகரன் அதை திருட்டுக்காக பயன்படுத்தியதாக போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.