தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைய வைத்த நெல்லை அறுவடை செய்து விற்பனைக்காக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வைத்துள்ளனர். அந்த நெல் மூட்டைகளைக் நாட்கணக்கில், மாதக்கணக்கில் எடைபோட்டு விலைக்கு எடுத்துக்கொள்ளாததால், அவை மழையில் நனைந்து வீணாகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கள் நிலத்தில் விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும் மழையில் நனையாமல் பாதுகாப்பதற்கு வழிவகை செய்யுமாறும் கூறி நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
உதாரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏ.குமாரமங்கலம் இந்திலி நாகலூர், தேவபாண்டலம், பகண்டை கூட்ரோடு, பாதாரம் பள்ளம், சிறுநாவலூர் உட்பட பல்வேறு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காலதாமதம் செய்ததால், அங்கு விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மழையில் நனைந்து முளைத்துவிடுகின்றன. இதனால் அதை வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக எடை போட்டு எடுத்துக் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படும்போது நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி நேற்று (13.07.2021) நைனார்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூட நெல் கொள்முதல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் உட்பட பல்வேறு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2020 - 21 ஆண்டுகளில் தற்போதுவரை 3,112 விவசாயிகளிடமிருந்து 16,358 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவரும் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டதுபோல விவசாயிகளின் நெல்லை மழையில் நனையவிடாமல் உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.