
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அதில், “சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகிறது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இடம் கிடைக்காத சூழல் நிலவிவருகிறது.
இம்மருத்துவமனையில் தேவையான அளவு படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி தர வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மாணவர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. அதனை தற்காலிக கரோனா சிகிச்சை மையமாக மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு மருத்துவமனையில் இடம் இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கோல்டன் ஜூப்ளி மாணவர் விடுதி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றில் செயல்பட்டுவரும் தற்காலிக சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்குத் தரமான, சத்தான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்திட வேண்டும். மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறையினைப் போக்கி தடுப்பூசி போட வரும் அனைவருக்கும் ஊசி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.