எஸ்பிஐ வங்கியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண் ஒருவர் வங்கி பணியாளர்களிடம் நன்கு பழகி நூதன முறையில் வங்கியில் இருந்த அடமான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஆறாம் தேதி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது லாக்கரில் இருந்த நகைகளின் அளவு குறைந்து காணப்பட்டது. மொத்தமாக 24 வாடிக்கையாளர்களின் அடகு வைத்த தங்க நகை பாக்கெட்டுகளில் மொத்தம் 54 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. உடனடியாக கிண்டி மண்டல மேலாளருக்கு வங்கி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் வங்கியில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த லூர்து மேரி என்ற ஊழியர் நகையை திருடியது தெரியவந்தது. உடனடியாக செம்மஞ்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த லூர்து மேரி, 'சர்வீஸ் கேர்' என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் கடந்த நான்கு வருடங்களாக எஸ்பிஐ வங்கியில் தூய்மை ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். தூய்மைப்பணி மட்டுமல்லாது வங்கியில் உள்ள ஊழியர்களுக்கு டீ, காபி வாங்கி கொடுப்பது, பைல்களை மற்ற அதிகாரிகளிடம் கொடுக்கச் சொன்னால் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார்.
தொடர்ந்து நற்பெயரை வாங்கி வந்ததால் வங்கி ஊழியர்கள் அனைவரும் அவர் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அண்மையில் அடகு வைக்க வந்த நகைகளை சரி பார்த்து அதை கவரில் போடும் பணிக்கு வங்கி அதிகாரிகள் லூர்து மேரியை உதவிக்காக அழைத்துள்ளனர். கவரில் நகைகளை போடும்போது அதில் பல நகைகள் இருந்தால் அதில் ஒன்றை மட்டும் வங்கி ஊழியர்களுக்கு தெரியாமல் அவர் திருடி வைத்தது தெரிய வந்தது. திருடிய அந்த நகைகளை அதே ஓஎம்ஆர் சாலையில் உள்ள மணப்புரம் தங்க நகை கடையிலும், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திலும் அடகு வைத்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அடகுக் கடைகளில் அவர் வைத்த நகைகள் மீட்கப்பட்டது.