தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைப் பக்கமுள்ள புளியரைப் பகுதி தமிழக கேரள எல்லைப் புறம். அந்த எல்லையின் இருமுனைகளிலும் தமிழக – கேரள அரசுகளின் பலதுறைகளைக் கொண்ட தலா நான்கு சுங்கச் சாவடிகள் உள்ளன. அன்றாடம் இருமாநிலத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள், சுமார் ஆயிரத்திற்கும் மேல் பயணிப்பதோடு இரு மாநில பயணிகளும் பணி நிமித்தம் அங்கும் இங்கும் பயணிக்கின்றனர்.

தற்போது கேரளா பறவைக் காய்ச்சல் மற்றும் கொடூரமான கொரோனாவின் தாக்கங்களிலிருக்கிறது. இந்த நிலையில் புளியரைப் பகுதியில் தமிழக அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவிலிருந்து வருகிற வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். முகாமிட்டுள்ள கால் நடைப் பராமரிப்புத் துறையின் உதவி இயக்குனரான அசன் இப்ராஹிம் தலைமையிலான குழுவினரோ கேரளாவிலிருந்து கொண்டுவரப்படுகிற கோழி முட்டை மற்றும் கோழி தீவனங்களின் வாகனங்களைத் திருப்பி அனுப்பிவைக்கின்றனர்.
இதனிடையே கேரளாவிற்குள் செல்கிற தமிழகத்தின் மற்றொரு வழியும் வாயிலுமான மலை மீதுள்ள மேக்கரைப் பகுதி கடந்தப் பத்து நாட்களுக்கும் மேலாகக் கவனிக்கப்படாமலிருந்தது. மேலும் கேரளா செல்பவர்கள் இந்த வழியையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த மேக்கரைப் பகுதி தமிழக எல்லையான பண்பொழி வந்து அங்கிருந்து கேரளாவின் ஐயப்பனின் மற்றொரு கோவிலான அச்சன் கோவில் செல்லும் பகுதியில் உள்ளது. எனவே ஐயப்பனை தரிசிக்க இங்கு கேரள பக்தர்கள் திரளாக வருவார்கள்.

காலதாமதம் ஏற்பட்ட நிலையில் எல்லை பகுதியின் நிலைமை கண்டு பரபரப்பான தமிழக சுகாதாரத் துறையினர் குழு ஒன்று மலைமீதுள்ள மேக்கரை வாயிலில் நேற்று முகாமிட்டுள்ளது. வரும் வாகனம் முதல், பயணிகளையும் சோதனைக்குப் பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர். மேலும் காய்ச்சல் இருமலுடன் பயணிகள் வருகின்றனரா என்றும் உபகரணம் கொண்டு சோதனையிடுகின்றனர்.
இதனிடையே நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட ஒருவர் மற்றும் பேட்டையில் தங்கியிருந்த மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் என இருவரும் சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மற்றும் தென்காசி மாவட்டப் பகுதியைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சளி காய்ச்சல் இருமல் காரணமாக கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நெல்லையின் கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் என மூன்று பேர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 38 வயதுடைய அந்தப் பெண், அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் சென்று விட்டு சொந்த ஊர் திரும்பியது தெரியவந்தது.