இனம், நிறம், பாலினம், மொழி, மதம் என எந்தவித வேறுபாடுமின்றி ஒவ்வொரு மனிதனும் மனிதனாக வாழ்வது அவசியம் என்பதை உணர்த்தவே மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. அம்மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அப்படி அதேநாளில் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியும், சமூக செயற்பாட்டுக் குழுவைத் தோற்றுவித்தவருமான கிரேஸ் பானு, மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு உரிமையைக் கேட்டுப் பல்வேறு அரசியல் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மூன்றாம் பாலினத்தவரும் மற்றவர்களுக்கு சரிசமமாகப் பயணிக்க கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் இடஒதுக்கீடு அவசியமாகிறது. ஒவ்வொரு திருநங்கையும், மருத்துவம் படிப்பதாக இருந்தாலும், அரசுப் பணியில் சேர்வதாக இருந்தாலும் அவர்கள் அதனை அடைவதற்கு தனித்தனியே போராட வேண்டியதாக இருக்கிறது. எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் பாலின ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர்.
2014ஆம் ஆண்டு நல்சா வழக்கில் உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யலாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய அரசு கிடைமட்ட இடஒதுக்கீட்டை வழங்காமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க முயற்சித்துவருகிறது. இதை முன்வைத்தே அனைத்து தலைவர்களுடனான சந்திப்பும் நிகழ்ந்துவருகிறதாம்.
இதுகுறித்து பேசிய திருங்கை கிரேஸ்பானு, “எங்கள் தேவை பெரும்பான்மை சமூகத்தினரின் இரக்கம் அல்ல; அரசியல் அமைப்பால் உறுதி செய்யப்பட்ட உரிமைகள் மட்டுமே. இங்குள்ள அனைத்து மாற்றுப்பாலினத்தவரும் ஓ.பி.சி. அல்ல, சாதிய ரீதியாக ஒதுக்கப்படுவதோடு சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்டுள்ளோம். மாற்று பாலினத்தவரின் பங்களிப்பையும், பாதுகாப்பையும் அனைத்து இடங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் குரலாக உள்ளது.
அதன்படிதான் எங்களுக்கான போராட்டக் களத்திலும் எங்கள் மீது அக்கறையாக உள்ள தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கையை வைத்துவருகிறோம். அந்தவகையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமார், கனிமொழி, திருச்சி சிவா, தமிழச்சி தங்கப்பாண்டியன், காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்டவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அதேபோல, பி.எஸ்.பி. எம்.பி.யான ராம்ஜி கெளதம், கேரள, மஹாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில எம்.பி.கள் என மொத்தமாக 12 பேரிடம் மனு கொடுத்துள்ளோம். மேலும், ராகுல் காந்தியையும் சந்திக்கவுள்ளோம். அவர்கள் மூலமாக இக்கூட்டத்தொடரில் பேசப்பட்டு எங்களுக்கான நியதியை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையோடு இந்தக் களத்தில் பயணிக்கிறோம்” என்றார்.