Skip to main content

“மகாத்மா காந்தியால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டப்பட்டவர்..” அஞ்சலை அம்மாள் சிலை அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு 

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

"Mahatma Gandhi was hailed as the Queen of the Southern Jhansi." ramadoss

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், விடுதலை வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், இலக்கியப் படைப்பாளிகள், திராவிட இயக்க முன்னோடிகளுக்குச் சிலை வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், அஞ்சலை அம்மாள், அப்துல் கலாம், இரவீந்திரநாத் தாகூர், மருது சகோதரர்கள், ப. சுப்பராயன்,  மு.வரதராசனார்,  முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் உள்ளிட்டோருக்குச்  சிலை அமைக்கப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. 

 

இதனை வரவேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. விடுதலைப் போரில் அஞ்சலையம்மாள் அனுபவித்த துயரங்களுக்கும்,  செய்த தியாகங்களுக்கும் இது சிறந்த அங்கீகாரம். இது வரவேற்கத்தக்கது.

 

கொடுங்கோலன்  நீலன் சிலையை அகற்றுவதற்காக எந்த மண்ணில் அஞ்சலையம்மாள் போராடினாரோ, அதே மண்ணில் அவருக்குச் சிலை அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அஞ்சலை அம்மாளுக்கு நினைவு மண்டபமும் அமைக்கப்பட வேண்டும் என்பதே பா.ம.க.வின் கோரிக்கை.

 

வயிற்றில் கருவைச் சுமந்த நிலையில்  ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி சிறைக்குச் சென்ற வீரப்பெண்மணி, மகாத்மா காந்தியால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் பெருமைகளையும், வரலாற்றையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்

 

தமிழகத்தின் பிற பகுதிகளில் அப்துல் கலாம், இரவீந்திரநாத் தாகூர், மருது சகோதரர்கள், ப. சுப்பராயன், மு.வரதராசனார்,  முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் உள்ளிட்டோருக்குச்  சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்