தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்திலேயே இருந்த தக்காளியின் விலை அதிகபட்சமாக 160 ரூபாய் வரை உயர்ந்தது. திருச்சி காந்தி சந்தையில் கடந்த ஒரு வாரமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே பசுமைப் பண்ணை கூடங்களில் காய்கறிகள் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நியாய விலை கடைகளில் இன்று முதல் தக்காளி காய்கறிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்தது. அதையடுத்து நேற்று கிலோ 80 ரூபாய் வரை விற்பனையான தக்காளி இன்று கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர் மழையின் காரணமாகவும் ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்துக் குறைவு காரணமாகவும் விலை உயர்வு ஏற்பட்டது என வியாபாரிகள் கூறினர். தக்காளியின் விலை குறைந்து வரும் அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கத்திரிக்காய் கிலோ 140 ரூபாய்க்கு, அவரைக்காய் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.