தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் அனைத்துச் சமயம் சார்ந்த பெருவிழாக்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுச் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆடி அமாவாசை என்ற நிலையில் தமிழகத்தில் பல நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்விற்காக மக்கள் கூடுவார்கள் என்பதற்காக நீர்நிலைகள் பகுதிகளில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்டு 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடக்கவிருந்த வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக மலர்க்கண்காட்சி, கலைநிகழ்ச்சி, வில்வித்தை உள்ளிட்டவைகளும் நடக்காது. வல்வில் ஓரி விழாவிற்காக கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.