நீலகிரி மாவட்டம் கூடலூரில் மூன்று பேரைக் கொன்ற புலி, கடந்த ஆறு நாட்களாக அங்குள்ள தேவன் எஸ்டேட்டில் பதுங்கியிருந்தது. அங்குப் பதுங்கியிருந்தபோது, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. அதேசமயம், இது ஆட்கொல்லி புலியானதால், தேவன் எஸ்டேட் பகுதியில் இருக்கும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஏழாவது நாளான இன்று (01.10.2021) அந்தப் புலி பதுங்கியிருந்த இடத்தில் அதைத் தேடுவதற்காகப் பணியிலிருந்த வனக் காவலர்கள் சென்றனர். அப்போது, தெப்பக்காட்டிலிருந்து மசினக்குடி செல்லும் சாலையில், ஒரு புலி சோர்வான நிலையில் நடந்து சென்றதை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கண்டுள்ளனர். அதனை அவர்கள் தங்கள் செல்ஃபோன்களிலும் பதிவுசெய்துள்ளனர். மேலும், அது தொடர்பான தகவலும் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர், ஏற்கனவே மசினக்குடி முதல் தேவன் எஸ்டேட் வரை பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அந்தப் புலி அவ்வழியாகக் கடந்து சென்றதற்கான புகைப்படங்கள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் மூன்று பேரைக் கொன்ற புலி இன்று நான்காவதாக ஒரு நபரைக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டி23 புலியைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களில் 4 பேரைக் கொன்றதோடு மட்டுமல்லாமல் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை இந்த புலி கொன்றுள்ளது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் புலி சிக்காத நிலையில், இன்றும் ஒருவர் புலியால் உயிரிழந்துள்ளதால் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் பூங்காவில் விடவேண்டும் என்ற திட்டம் கைவிடப்பட்டு, ஆட்கொல்லி 'டி23' ஐ சுட்டுப்பிடிக்க வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.