Skip to main content

சிகிச்சையின் போது இளைஞர் பலி; மருத்துவமனையை மூட உத்தரவு!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
Order to close the chennai tambaram private hospital

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சல் அடைந்த ஹேமச்சந்திரன் உடல் எடையைக் குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்கச் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

Order to close the chennai tambaram private hospital
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்தக் குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இதற்கான அறிக்கை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் வழங்கப்பட்டது. அதில், “அறுவைச் சிகிச்சைக்கு முன்பு பெற்றோரிடம் உரிய தகவலை தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் கையெழுத்து பெறவில்லை. மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவில் இல்லை. மருத்துவமனையில் போதுமான அளவில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை. அறுவைச் சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை என்று உறுதியானதைத் தொடர்ந்து மருத்துவமனையைத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்