மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு கட்டப்பட்ட கோவிலை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னெடுப்பில் கட்டப்பட்டுள்ள கோவில், இன்று (30.01.2021) திறக்கப்பட்டது. மொத்தம் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் இருவருக்கும் 7 அடியில் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தக் கோவில் திறப்பு விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுக நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாக சாலை, கோ பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நலிவுற்ற அதிமுக தொண்டர்கள் 234 பேருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வேல் பரிசாக அளிக்கப்பட்டது.
இந்தக் கோவில் திறப்பு விழாவில் பேசிய துணைமுதல்வர் ஓ.பி.எஸ், “ஆட்சியைப் பிடிக்க சிலர் வேலை கையில் பிடித்து வருகிறார்கள். வேலை பிடித்தாலும், ஆளை பிடித்தாலும் ஆட்சியை மட்டும் பிடிக்கமுடியாது,” என திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகாக விமர்சித்தார்.
அண்மையில் கிராமசபைக் கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்ட நிலையில், அவர் வேலுடன் நிற்கும் புடைக்கப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.