தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இறுதியாக நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது பேசுபொருளானது.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ், ‘வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமானதே’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமானதே. சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு உறுதியாகும். குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கூடுவதற்கும், குறைவதற்கும் வாய்ப்புள்ளது'' என்றார்.