தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்திற்கு அருகே இருக்கும் தனியார் மோட்டார் வாகன கம்பெனியில் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இச்சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்.
அதே சமயம், போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் கடந்த மூன்று மாதங்களாகத் திணறி வருகின்றனர். இந்நிலையில், அந்த மோசடியில் சம்பந்தப்பட்ட முக்கியக் குற்றவாளி ஊட்டியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் மாதவன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஊட்டி, குன்னூர் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், ஊட்டிக்குச் சென்ற அவர்கள் குளுகுளு பகுதிகளை கண்டவுடன் வந்த வேலையை மறந்துவிட்டு சீசனை அனுபவிக்கத் தொடங்கினர். வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி மாங்காய் தின்பது, தேங்காய் தின்பது, இளநீர் குடிப்பது என அலப்பறை காட்டிய காவல் அதிகாரிகள், தங்கள் இஷ்டத்திற்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று செல்பி எடுத்து என்ஜாய் செய்துள்ளனர்.
அதன்பிறகு சுற்றுலாவை முடித்துக்கொண்ட போலீசார், குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற வேலையை மறந்து, குற்றவாளி கிடைக்கவில்லை எனக் கூறி ஊருக்குத் திரும்பினர். ஆனால், ஊட்டியில் அவர்கள் எடுத்த செல்பிக்களும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற காவலர்கள், “எங்களுக்கு இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்காதா” என ஏங்கும் அளவிற்கு அந்த புகைப்படங்கள் பரவி வருகிறது.
மேலும், குற்றவாளியைப் பிடிக்கச் செல்கிறோம் என்ற போர்வையில், சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இது போன்ற காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.