தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி (08-01-24) இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதற்காக மேட்டூரிலிருந்து கடந்த 7 ஆம் தேதி மாலை பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி லூர்து அன்னை மேரி தேவாலயத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து, லூர்து அன்னை மேரிக்கு மாலை அணிவிக்க அண்ணாமலை சென்றார். அப்போது அங்கிருந்த இளைஞர்களும், கிறிஸ்தவர்களும், அண்ணாமலை உள்ளே செல்லக்கூடாது என அவரைத் தடுத்து நிறுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அங்கிருந்த இளைஞர்கள், ‘புனிதமான இடத்தில் நீங்கள் வந்து மாலை அணிவிக்கக்கூடாது என்றும் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில், கிறிஸ்துவ மக்களை கொன்றதற்கும் தேவாலயத்தை இடித்ததற்கும் பதில் சொல்ல வேண்டும்’ என்றும் அண்ணாமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர்களிடம் அண்ணாமலை, “நாங்கள் எல்லாவற்றையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் செய்கிறோம். அங்கு நடப்பது இரு பழங்குடியினர் இடையே நடக்கும் தகராறு. அதனால், நீங்கள் மதத்தை வைத்து எதுவும் கேட்கக்கூடாது” எனக் கூறினார். இதையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள், ‘மதத்தை வைத்து அரசியல் செய்வது யாரென்று மக்களுக்குத் தெரியும்’ எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை அவர்களிடம், “இலங்கையில் 2009இல் கலவரம் நடந்தது. அதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்தனர். அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை. கட்சிக்காரர்களின் தூண்டுதலின் பேரில் நீங்கள் இப்படி செய்கிறீர்கள். தேவாலயத்திற்கு என்னை வரக்கூடாது என்று தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த சர்ச் உங்கள் பெயர்லயா இருக்கிறது? நான் தர்ணா செய்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார்.
இப்படி இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்களை போலீசார் விலக்கி தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர், கூட்டத்தினர் அனைவரும் ‘வெளியே போ... வெளியே போ... பி.ஜே.பி.யே வெளியே போ’ என கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தினரை சமாதானப்படுத்திய போலீசார், அண்ணாமலையை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொம்மிடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.