Skip to main content

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம்! காங்கிரஸ் தி.மு.க தமிழர்களுக்கு எதிரான கூட்டணி- துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிரச்சாரம்!

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

அ.தி.மு.க கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் நாராயணசாமி மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் நெடுஞ்செழியன் ஆகியோரை ஆதரித்துதுணை முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் புதுச்சேரியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

 

ops

 

அப்போது அவர், புதுச்சேரி மக்களின் நீண்ட நாள்  கோரிக்கை தனி மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதுதான். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை வெற்றி பெறச்செய்தால் மாநில அந்தஸ்து பெற்றுத் தர  உறுதியாக செயல்படுவார். அதற்கு அ.தி.மு.க. துணை நின்று முயற்சி எடுக்கும். புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுடைய தேவைகளையும், மாநிலத்துக்கு கிடைக்கக்கூடிய தொலைநோக்கு திட்டங்களையும் பெறுவதில்  அக்கறை காட்டவில்லை. ஏதோ ஒரு நாடகம் நடத்துவது போல ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வரும். இங்கு ஒரு நல்ல ஆட்சி, நிலையான ஆட்சி, மக்களின் தேவைகளை தீர்க்க கூடிய ஆட்சி மலரும்” என்றார்.

 

OPS Cuddalore Puducherry election campaign

 

அதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமியை ஆதரித்து கடலூரில் பிரச்சாரம் செய்தார்.  அப்போது, “இலங்கையில் 40 ஆயிரம் தமிழர்களை கொன்று குவிக்க உடந்தையாக இருந்த காங்கிரஸ்- திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமர துடிக்கிறது.  அவர்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். காவிரி பிரச்சினைக்காக காங்கிரஸ் கூட்டணியிலிருந்த திமுக அந்த பிரச்சினையை  கையில் எடுக்காமல் விட்டு விட்டது.  ஆனால் மறைந்த  முதலவர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி, நடுவர் மன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் வாதாடி அந்த தீர்ப்பை கெசட்டில்  வெளியிட்டார்.  பத்தாண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை. கடலூரில் மறைந்த எஸ் எஸ் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, அது விரைவில் திறக்கப்பட உள்ளது.  

 

அதே போன்று மேல் குமாரமங்கலம் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே  சுரங்கப்பாதை,  மேல் குமாரமங்கலத்தின் 30 கோடி செலவில் பாலம் உள்ளிட்ட பல திட்டங்கள் வர உள்ளன. தி.மு.கவினர் பிரியாணி கொடுக்க கொடுக்க வில்லை என்று பிரியாணி கடையை அடித்து நொறுக்குகிறார்கள்  ஸ்டாலினும், அவரது கட்சியினரும்  அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்