சென்னையில் வருடந்தோறும் ஜனவரியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக புத்தகக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் 43 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடந்து முடிந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற புத்தகக் காட்சியில் 20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக புத்தக கண்காட்சி விழாவை ஒருங்கிணைத்து நடத்திய பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. பதிமூன்று நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு 13 லட்சம் பேர் வந்துள்ளனர். அதேபோல் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் வாசகர்கள் கூடுதலாக வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் புத்தக பதிப்பகத் துறையில் திறம்பட பணியாற்றியவர்களுக்கு பபாசி அமைப்பு சார்பில் விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவிற்கு வருகை புரிந்த துணை முதல்வர் ஓபிஎஸ் புத்தக பதிப்பகத் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதில் நக்கீரன் பதிப்பகத்தில் திறம்பட பணியாற்றிய கணேசன், சத்தியசீலன், தனுஷ் ஆகிய மூவரும் விருது பெற்றனர் .மூவருக்கும் துணைமுதல்வர் ஓபிஎஸ் விருது வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் மற்றும் பபாசி தலைவர் சண்முகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.