ஆண்டிபட்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், "தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ'க்கள் என்னை சந்திக்க தூது விட்டனர்" என ஒபிஎஸ் பேசினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் விஜயபாஸ்கர். மற்றும் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன், தேனி எம்.பி பார்த்திபன்.மாவட்டசெயலாளர் சையது கான்.மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் இறுதியாக பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்சோ.... "1088கோடிக்கு ஆண்டிபட்டியில் வளர்ச்சிப்பணிகள் நடந்திருக்கின்றன. அது தங்கத்தமிழ்ச்செல்வன் போன பிறகு தான் நடந்திருக்கின்றன. ஆண்டிபட்டியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். 2007ல் வெளியேற்றப்பட்டவர் தினகரன். பத்து வருடங்களாக ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை, ஜெயலலிதாவை பார்க்க ஒரு முறை கூட வரவில்லை. மன்னிப்புக் கடிதம் எழுதவில்லை. அவர், இறந்தவுடன் வந்துவிட்டார்.
மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தார். நாம் தாடி வைத்துக்கொண்டு கோவிலில் பிராத்தனை செய்துகொண்டிருந்தோம். மாநிலம் முழுவதும் பிராத்தனைகள் நடந்துவந்தன. தினகரன், பாண்டிச்சேரியில் அமர்ந்துகொண்டார். அவருக்கு ஜெயலலிதா மேல் அக்கறை இல்லை. அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கினார்கள் என எனக்கும் ஜெயலலிதாவிற்கும் மட்டுமே தெரியும். இன்று அ.தி.மு.க அழிந்துவிடும் என்கிறார். என்னென்னமோ பேசுகிறார். அவர் பேசியதற்கு எல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் மீண்டும் என்னை தொடுகிறார். நான் தொட்டால் அவர் எங்கு சென்று விழுவாரோ தெரியாது. என்னை பார்ப்பதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ'க்கள் நான்கு பேர் தூதுவிட்டனர். செந்தில் பாலாஜி எங்களிடம் வருவதற்கு மனு போட்டார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார். அரவக்குறிச்சியில் அவர் செய்த துரோகத்தை என்னிடம் பட்டியலிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆசை, மத்திய அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்ற ஆசை அவருக்கு. செந்தில்பாலாஜி எந்த கட்சிக்கு சென்றாலும் அது உருப்படாது." என்று பேசினார்.