அரசுப் பள்ளிகளில் வழக்கமான கற்றல் செயல்பாடுகள் மட்டுமின்றி கலை சார்ந்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க கலை, இலக்கியம் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற இணைச் செயல்பாடு மன்றங்கள் முடங்கி இருந்தன. இந்நிலையில் அவற்றை புதுப்பித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்வி இணைச் செயல்பாடுகள் சார்ந்த போட்டிகளில் சிறப்பாகப் பங்களிக்கும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ''தமிழகத்தில் 2022&23ம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் செயல்பாடுகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படித்து வரும் அனைத்து மாணவர்களையும் கல்வி இணைச் செயல்பாடுகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதற்காக இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், தமிழ் மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வானவில் மன்றம் உள்ளிட்ட மன்றங்களை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி மாதந்தோறும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட வேண்டும்.
மாவட்ட அளவில் நடத்தப்படும் சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம், வினாடி வினா, வானவில் மன்றம் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். அனைத்து வகை போட்டிகளிலும் குறிப்பிட்ட சில மாணவர்களே வெற்றி பெறும் வகையில் அல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி பள்ளி, வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி, ஒன்றிய, மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளின் விவரங்கள், சிறப்பு விருந்தினர்களின் விவரங்கள் ஆகியவற்றை முழுமையாக மாவட்ட பள்ளிக் கல்வித் திட்ட அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் அனைத்து கல்வி இணைச் செயல்பாடு தொடர்பான மன்றங்களையும் கண்காணித்து சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.
இதற்காகப் பள்ளி அளவில் பொறுப்பு அலுவலராக சம்பந்தப்பட்ட மன்றத்தின் பொறுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிக்கு பள்ளிக் கல்வித்துறை துணை ஆய்வாளரும், மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலரும் பொறுப்பேற்று போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும்'' என்றனர்.