Skip to main content

டி.டி.வி.யின் ஆதரவாளர்களை தனது பக்கம் இழுத்த ஓ.பி.எஸ்.!

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
டி.டி.வி.யின் ஆதரவாளர்களை தனது பக்கம் இழுத்த ஓ.பி.எஸ்.!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, போடி, கம்பம், பெரியகுளம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றிய பொறுப்பில் உள்ள அ.தி.மு.க.வினர் பெரும்பாலானோர் டிடிவி பக்கம் தான் இருந்து வந்தன. இதனாலேயே டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வனும் கூட ஓ.பி.எஸ்.க்கு சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு இல்லை. தேனி மாவட்டம் அண்ணன் டிடிவியின் கோட்டை அதை ஓ.பி.எஸ் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் தான் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் இணைந்து ஓ.பி.எஸ்.க்கு துணை முதல்வர் பதவியும், கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் நியமித்ததுடன் பொதுக்குழு கூட்டத்தையும்  வருகிற 12ம் தேதி கூட்ட உள்ளனர். அதற்குள் ஓ.பி.எஸ். சொந்த மாவட்டத்தில் பழைய செல்வாக்கை கொண்டு வந்து பொதுக்குழு உறுப்பினரையும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம் பேரூர் கழக செயலாளர்களுக்கு வலைவிரிக்க முடிவு செய்தார். 

அதற்காக தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், மாவட்டத் துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், முன்னாள் எம்.பி. சையது கான், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை ஓ.பி.எஸ். அதிரடியாக அமைத்து மாவட்டத்தில் கட்சிப் பொறுப்பில் உள்ள டிடிவி ஆதரவாளர்களை தூக்க வழிவகுத்து கொடுத்தார். 

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள ஆறு நகர செயலாளர்களின் சின்னமனூர் நகரச் செயலாளர் சுரேஷ் டிடிவியின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவரை தவிர போடி பாலமுருகன், பெரியகுளம் ராதா, தேனி முருகேசன், கம்பம் பாலு, கூடலூர் சோலைராஜ் ஆகிய ஐந்து நகரச் செயலாளர்களும் ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்துவிட்டனர். 

அதுபோல் மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றிய செயலாளர்களில் போடி சற்குணம், கம்பம் இளையநந்தி, ஆண்டிப்பட்டி பால்பாண்டி, உத்தமபாளையம் ஜெய்லானி ஆகிய நான்கு ஒன்றிய செயலாளர்கள் ஓ.பி.எஸ். பக்கம் தாவிவிட்டனர். மற்ற நான்கு ஒன்றிய செயலாளர்களான சின்னமனூர் முத்துச்சாமி, தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், கடமலை மயிலை தர்மராஜ் ஆகியோர் டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்கள். 

இப்படி மாவட்டத்தில் உள்ள ஆறு நகரச் செயலாளர்களில் ஐந்து நகரச் செயலாளர் ஓ.பி.எஸ். பக்கமும், எட்டு ஒன்றிய செயலாளர்களில் நான்கு ஒன்றிய செயலாளர்கள்  ஓ.பி.எஸ். பக்கமும் போய்விட்டனர். அதுபோல் 14 பேரூர் கழக செயலாளர்களின் பத்து பேரூர் கழக செயலாளர்கள் வரை ஓ.பி.எஸ். பக்கம் போய்விட்டனர். இது இல்லாமல் பொதுக்குழு உறுப்பினர்களான அம்சகோமதி, ராஜாமணி, ராஜகுரு, சேட் அருணாச்சலம் ஆகிய நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும், ஓ.பி.எஸ். குழு வலைத்துபோட்டுவிட்டது. 

அதேபோல் மாவட்ட கழக நல்லுச்சாமி, மாவட்டச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் டிடிவியின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவர்களை தவிர துணைச் செயலாளர் முருக்கோடை ராமர், இணைச் செயலாளர் கோபி, பொருளாளர் சின்னக்காளை ஆகியோர் எல்லாம் தொடர்ந்து ஓ.பி.எஸ். பக்கம்தான் இருக்கிறார்கள். இப்படி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டிடிவி ஆதரவாளர்களை ஓ.பி.எஸ். தன் பக்கம் இழுத்ததின் மூலம் நடக்கக்கூடிய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் தன் மாவட்டத்தின் செல்வாக்கை ஓ.பி.எஸ். நிரூபிக்க இருக்கிறார். 

இதுபற்றி டிடிவியின் ஆதரவாளர்கள் ஒரு சிலரிடம் கேட்;டபோது... ஓ.பி.எஸ்.க்கு பதவி இல்லாத போது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் எல்லாம் அண்ணன் டிடிவி பக்கம்தான் இருந்தனர். ஆனால் தற்போது ஓ.பி.எஸ்.க்கு பதவி வந்தவுடன் அதிகாரம், பண பலத்தால் அண்ணன் டிடிவி ஆதரவாளர்களை விலைக்கு வாங்கி வருகிறார். ஓபிஎஸ்-யின் தொகுதியில் உள்ள போடி நகரச் செயலாளர் பாலமுருகன் டிடிவியின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஓ.பி.எஸ்.-யின் கொடும்பாவியை கூட எரித்தார். அதோடு போடிக்கு வரும் வழியில் உள்ள சாலை பத்திரகாளியம்மன் கோவிலை தாண்டி போடிக்கு கால் வைத்து பார் நான் யார் என்று தெரியும் என ஓ.பி.எஸ்.க்கு சவால் விட்ட நகரச் செயலாளர் பாலமுருகன் திடீரென பல்டி அடித்து மூன்று நாளைக்கு முன்பு சென்னைக்கு மனைவி விஜயலட்சுமியுடன் போய் ஓ.பி.எஸ். காலில் விழுந்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி  பாலமுருகன் ஓ.பி.எஸ். உடன் ஐக்கியம் ஆகிவிட்டார். அந்த அளவுக்கு டிடிவியின் ஆதரவாளர்கள் எல்லாம் ஓ.பி.எஸ். மூலம் நியமிக்கப்பட்ட குழுவினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து லட்சக்கணக்கில் பேரம் பேசியும் பதவியுடன் தொடர்ந்து வருமானத்திற்கு வழிவகுத்து கொடுப்பதாகவும் கூறி அண்ணன் டிடிவி ஆதரவாளர்களை இழுத்து வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கத்தமிழ்ச்செல்வன், கதிர்காமு, ஜக்கையன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.வை தவிர ஒட்டுமொத்த பொறுப்பாளர்களும் ஓ.பி.எஸ். பக்கம் போய்விடுவார்கள் என்று கூறினார்கள்.

பொதுக்குழுவில் தன் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்கள் மூலமாக அண்ணன் டிடிவி ஆதரவாளர்களை பண ஆசை காட்டி இழுக்க பார்க்கிறார்கள்.ஆனால் யாரும் ஓ.பிஎஸ். பணத்திற்க விலை போகவில்லை. தொடர்ந்து அண்ணன் டிடிவி பக்கம்தான் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றியம் உள்பட பொறுப்பாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்றார் டிடிவியின் தீவிர ஆதரவாளரான ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினரான தங்கத்தமிழ்ச்செல்வன்.
இதுபற்றி ஓ.பி.எஸ்.-யின் தீவிர ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது... இ.பி.எஸ். பக்கம் அண்ணன் ஓ.பி.எஸ். இணைவதற்கு முன்பே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொறுப்பாளர்களும், தொண்டர்களும், மக்களும் ஓ.பி.எஸ். பக்கம்தான் இருந்தனர். இது அனைவருக்கும் தெரியும். தற்போது இருவரும் இணைந்த பின் டிடிவியின் ஆதரவாளர்கள் என்று சொல்லி வந்த பொறுப்பாளர்கள் எல்லாம் தாங்களாகவே முன் வந்து அண்ணன் ஓ.பி.எஸ். பக்கம் சேர்ந்துவிட்டனர். இன்னும் இருக்கக்கூடிய  பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறோம். அதன்மூலம் மாவட்டத்தில் டிடிவியின் ஒட்டுமொத்த கூடாரமும் கூடிய விரைவில் காலியாக போக போகிறது என்று கூறினார். ஆக துணை முதல்வர் பதவி வந்ததின் மூலம் மீண்டும் தனது மாவட்டத்தில் செல்வாக்கை நிரூபித்து டிடிவியின் ஆதரவாளர்களை தனது பக்கம் இழுத்துவிட்டார் ஓ.பி.எஸ்.!

-சக்தி

சார்ந்த செய்திகள்