Skip to main content

“ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை 4 பிரிவுகளாக பிரித்து சிகிச்சை வழங்கிட நடவடிக்கை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி! 

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

Operation to divide patients in need of oxygen into 4 categories and provide treatment - Interview with Minister MRK Panneerselvam

 

கடலூர் மாவட்டத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேபோல் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 800-க்கு மேல் தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்டம், கடலூர் நகராட்சி கூட்டரங்கில் தமிழக வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, சுகாதாரத் துறை அலுவலர்கள்,  நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “கடலூர் நகராட்சியில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 45 வார்டுகளைக் கொண்ட நகராட்சி 5 மண்டலங்களாகப் பிரித்து வார்டு அளவிலான அதிகாரிகள் நியமித்து கணக்கெடுப்பு, மருத்துவ முகாம் நடத்துதல் போன்றவை மூலமாக நோய் தொற்று இல்லாத நகராட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 3 நபர்களுக்கு மேல் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதியைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொற்றுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

Operation to divide patients in need of oxygen into 4 categories and provide treatment - Interview with Minister MRK Panneerselvam

 

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் நோய்த்தொற்றில் அதிக வித்தியாசம் உள்ளது. தற்போது பரவும் தொற்று நுரையீரலைத் தாக்குவதால்  ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் 5 நாட்களில் வீடு திரும்பிய நோயாளிகள், தற்போது 20 நாட்கள்வரையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தற்போது ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ சேவைக்காக கடலூர் மாவட்டத்தில் 60 மருத்துவர்கள், தற்காலிக பணி ஆணை வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் நோய்த்தொற்று கண்டறியப்படும் பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்துதல் மற்றும் கிராமப் பகுதியில் உள்ள கிளினிக்குகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளவும், தலைமை மருத்துவமனை பணியில் ஈடுபடுத்தவும் வழி காணப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்