தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், வரும் 11 ஆம் தேதி முதல் 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளைத் திறக்கும் முன்பு 20 வகையான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதற்கு, 17 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கல்லூரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கல்லூரிகளைத் தூய்மைப்படுத்தி கட்டட உறுதித் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் எனவும் 17 கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், கல்லூரி வளாகங்களை முழுவதுமாக சுத்தம் செய்து முட்புதர்களை அகற்ற வேண்டும். கல்லூரி வளாக சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் அதிலிருந்து 20 அடி தூரத்தில் தடுப்பு அமைக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் மின் இணைப்புகளை சரி செய்து, மின்கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டிக்கலாம் எனவும் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.