விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சிந்தாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் வரவு செலவுக்கணக்கு வைத்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வங்கி கடன் உதவியும் செய்து வருகிறது.
அந்த வங்கியில் பணம் இருப்பு தொகை 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. திடீரென ரொக்கப் பணம் முழுவதும் காணவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக கேசியர் அறையிலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை கேசியர் முகேஷ் எடுத்துக் கொண்டு சென்றது தெரிய வந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய்யான காரணத்தை கூறி விட்டு வங்கிப் பணத்தை அள்ளிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் முகேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கேஷியரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து வங்கி பணத்தை பெற்று செய்து தருமாறு மேலாளர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மேலாளரின் புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த வங்கிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்கள்.தொடர் விசாரணையில் பணத்துடன் தலைமறைவான கேசியர் முகேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மக்கள் பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாண்டு 20 லட்சத்தை இழந்தது தெரியவந்துள்ளது.