ஆன்லைன் லோன் ஆப் மோசடி தொடர்பாக 2 சீனர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "ஆன்லைன் லோன் ஆப் மோசடி தொடர்பாக 2 சீனர்கள் உட்பட 4 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், பெங்களூருவில் தனியார் நிறுவன கால் சென்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடன் வழங்க பணம் எங்கிருந்து வருகிறது, எங்கெங்கு வழங்கப்படுகிறது என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.
சீனர்களின் லோன் ஆப் மூலம் சுமார் இரண்டும் லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர். ஆன்லைன் லோன் ஆப்களில் பெரும்பாலானவை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் நடத்தி வந்துள்ளது. லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் சீனர்கள் தொடர்புடையவை. லோன் ஆப் மூலம் கடன்பெறுபவர்கள் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கும் வகையில் ஒப்புதல் பெற்றுக் கொள்கிறார்கள். கடன் செயலியைப் பயன்படுத்த வேண்டாம்" என அறிவுரை வழங்கி வருகிறோம்" என்றார்.