ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்தாண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இந்திய அரசியலமைப்பு வழங்கக்கூடிய அதிகாரங்களுக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் செல்லுபடியாகக் கூடியது. பொது அமைதி, சுகாதாரம், சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், போலீசார் என இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர், 'ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்திருக்கின்றன. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. ஆனால், இப்பொழுது ஆன்லைன் விளையாட்டை அதிர்ஷ்ட விளையாட்டு என்றும், அதற்கு பலர் அடிமையானதாகவும், நிதியிழப்பை சந்திப்பதாகவும் கூறி தமிழக அரசு இந்த சட்டத்தை இயற்றியிருக்கிறது என வாதிட்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் இதில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது' என வாதிட்டார். இந்நிலையில் இறுதி விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிமன்றம் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தது.