கால மாற்றத்தினால், நல்லதொரு கலாச்சாரம்கூட நம்மால் கெட்டதாகிவிடுகிறது. அப்படி மாறிப்போன ஒரு வழக்கம்தான் மொய். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் மட்டுமல்ல.. இறப்பு, அதனைத் தொடர்ந்த பதினாறாம் நாள் காரியங்களில்கூட மொய் வழக்கம் இருந்து வருகிறது.
திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின்போது அளிக்கப்படும் மொய் ஒருவகை என்றால், வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே நடத்தப்படும் மொய்விருந்து என்பது இன்னொருவகை. இந்த மொய்யானது, வட்டியில்லாக் கடனென்றே மொய்ப்பணம் பெறுபவர்களால் குறித்து வைக்கப்படுகிறது. இதை ஒருவிதமான நிதி திரட்டல் என்றே சொல்லலாம். இப்படி ஒரு மொய் விருந்து நடத்தித்தான், போதுமான அளவு வசூலாகவில்லை என்று உயிரையே விட்டிருக்கிறார் ஒரு பெண்.
மதுரை மாவட்டம் – சோழவந்தான் - காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகம்மாள். கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார். பெற்றோரையும் இழந்துநின்ற அவர், வட்டிக்குப் பணம் கொடுத்து வாழ்க்கையை நடத்தினார். மொய் விருந்து நடத்தி வசூலாகும் பணத்தை வட்டிக்கு விடுவது, அவரது தொழிலில் வாடிக்கையானது. அதனை ஈடுகட்டும் விதத்தில், தனது உறவினர்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளிலும், துக்க காரியங்களின்போதும், பல ஆயிரங்களை மொய் செய்து வந்திருக்கிறார் நாகம்மாள்.
அந்த எதிர்பார்ப்போடுதான், உறவினர்களை அழைத்து சில மாதங்களுக்கு முன் மொய்விருந்து நடத்தினார். ஒரு கணக்குப்போட்டு, ரூ.40 லட்சம் மொய்ப்பணம் வரும் என்று அவர் எதிர்பார்த்தார். வசூலானதோ ரூ.12 லட்சம்தான். அதனால், மனம் உடைந்துபோய் புலம்பத் தொடங்கினார். அந்த விரக்திதான், தனது வீட்டில் தூக்குபோட்டு உயிரைவிடும் நிலைக்கு அவரைத் தள்ளிவிட்டது.
நவீன காலமல்லவா! மொய் டெக் என்னும் செல்போன் செயலியையும் உருவாக்கி வசூல் வேட்டை நடத்துகின்றனர். உறவினர்களுக்கு உதவும் நற்பண்பாக முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மொய்ப்பழக்கம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு பின்னாளில் மாறிப்போனது காலத்தின் கோலம்தான்!