Skip to main content

ஆன்லைனில் அரியர் தேர்வு... நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

 exam online ... Tamil Nadu government answers in court!

 

தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா முழுமுடக்க காலத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

 

தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த விசாரணையில் ‘தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக அரியர் தேர்வுக்குப் பணம் கட்டியிருந்தால் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உரிய முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிப்பட்டிருந்தது.

 

இன்று (15.04.2021) இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான அரசு வழக்கறிஞர், தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை கைமீறியுள்ளது. ஆன்லைனில் அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும், அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அரியர் தேர்வுகளை எப்பொழுது நடத்தலாம் என்று யு.ஜி.சியிடம் கலந்தாலோசித்து 8 வாரங்களுக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிக்கையை வரும் ஜூலை மாதம் 2ஆம் வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு  தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.