திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சேமிப்புக் கிடங்கு அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அச்சமடைந்த அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே வெள்ளக்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கு இருக்கிறது. அந்த இடத்துக்கு அருகிலேயே ஏராளமான மக்கள் குடிமனைகளோடு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எண்ணை சேமிப்புக்கிடங்கின் கட்டுப்பாட்டில் உள்ள கருவேலங்காடுகளில் திடீரென தீப்பிடித்து பரவியது. இந்த தீ மளமளவென எண்ணை கிடங்குவரை பரவியது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினர் பெரும் சிரமத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எண்ணை கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர், பொருளாதார சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும், அதனை தீயணைப்புத்துறையினர் தடுத்துள்ளனர். தீயைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், " மத்திய அரசும் மாநில அரசும் இந்த குடியிருப்புகளை வேறு பகுதிகளுக்கு பட்டாவுடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும். இல்லை என்றால் எண்ணை கிடங்கை மக்கள் இல்லாத இடத்திற்கு மாற்றவேண்டும்," என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.a