சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உலக நாடுகளில் இருந்தும், இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் திங்கள் கிழமை இரவு கோவில் ஆயிரங்கள் மண்டபம் அருகே 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (40)(விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளர்) இவர் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களை அவரது செல்போனில் வீடியோ மற்றும் படம் எடுத்துள்ளார்.
இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எதற்கு வீடியோ படம் எடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது கோவிலில் கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? இதேபோல் அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என கேட்டபோது இது எங்க கோயில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம் அதனை கேட்க நீ யார் ? என்று ஒருமையில் தீட்சிதர்கள் பேசியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் அங்கிருந்த தீட்சிதர்கள் இளையராஜாவின் கையை முறுக்கி அடித்துள்ளனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ் ஒளி சிதம்பரம் காவல்துறையினரிடம் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி எடுக்கவில்லை என்றால் சிதம்பர நகரின் முக்கிய வீதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு சாலை மறியல் போராட்டம் செய்ய உள்ளதாக கூறினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மது போதையில் கிரிக்கெட் விளையாடியதாகவும், அதனைக் கட்சியின் முகாம் செயலாளர் வீடியோ எடுத்ததைத் தீட்சிதர்கள் தடுத்து அவரைத் தாக்கி செல்போனை பிடுங்கி உள்ளனர். இதே போல் கோவிலில் கனக சபையில் வழிபடப் பணம் பெற்றுக் கொண்டு அனுமதிப்பது கனக சபையில் வழிபடச் சென்ற பட்டியல் சமூகப் பெண்ணை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நடவடிக்கை இல்லை என்றால் கட்சியினர் ஒன்று திரண்டு தீட்சிதர்களுக்கு எதிராகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்” என அறிவித்தனர்.