திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (15.07.2023) திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில், “மதுரையின் மாபெருங்கனவொன்று நாளை நிறைவேறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரைக்கான பெருங்கொடை. அறிவே அற்றங்காக்கும் கருவி. அறிவின் வாசலை அனைவருக்குமாக்கவே நூலகங்கள் உருவாகின. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் பெருமை” என தெரிவித்துள்ளார்.