புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாத்தூர் ராமசாமாபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்ட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று மாலை 4 மணிக்கு நடக்க இருந்தது. இந்த நிலையில் தேர் அலங்கார சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடந்தது. இன்று காலை பலர் தேர் அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேரின் உச்சியில் வைக்கப்பட வேண்டிய பெரிய குடம் ஏற்றப்பட்ட போது தேர் சக்கரத்திற்கு மேலே சரிந்து ஒரு பக்கமாக விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது தேரின் மேல் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் தேருக்கு கீழே நின்றவர்கள் என பலர் சாய்ந்த தேருக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி மகன் மகாலிங்கம் (60) தேருக்குள் சிக்கி உயிரிழந்தார். மேலும், தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கோபு(45), கணபதி (50), சேந்தன்குடி தர்மலிங்கம் மகன் ஆறுமுகம் (46), மற்றும் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அழகர் (46), வீரையா மகன் விஜயகுமார் (36) ஆகியோர் படுகாயமடைந்து பேராவூரணி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.