தகுதி உடைய குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்புகளை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெறும் முகாம்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''தகுதியுள்ள அனைவருக்கும் கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரேஷன் கார்டுகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதில் ஒரு கோடியே 64 லட்சம் பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள். அதில் எப்படி இருந்தாலும் ஒன்றரை கோடி பேருக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் கூடலாம் கொஞ்சம் குறையலாம். தகுதி உள்ளவர்கள் என்று முதல் அமைச்சர் அறிவித்ததோடு அல்லாமல் முதலில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு இல்லாமல் இருந்த நிலையில் இப்பொழுது அதையும் மாற்றி முதியோர் உதவித்தொகை பெறுபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என அறிவித்துள்ளார். இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் தகுதி உடையவர்களை மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுக்கச் சொல்லி இருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளிலிருந்து எல்லோருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு வழங்கும்'' என்றார்.