Skip to main content

கட்டணத்தை குறைத்த ஆம்னி பேருந்துகள்; விவரங்கள் வெளியீடு

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

 Omni buses with reduced fares; Details Release

 

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயரும் நிலையில், பல்வேறு தரப்புகளில் இருந்து புகார் எழுந்ததால் திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள், சில பேருந்துகளைப் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்னும் இரு வாரங்களில் தீபாவளி திருநாள் வர இருக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது.

 

அதனடிப்படையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் ஐந்து சதவீதம் கட்டணத்தைக் குறைக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த இரண்டு வருடங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

தற்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கோவை செல்ல ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சமாக 1,725 ரூபாயும், அதிகபட்சமாக 2,874 ரூபாயும் வசூலிக்கப்படும். சென்னையிலிருந்து சேலம் செல்ல ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சமாக 1,363 ரூபாயும் அதிகபட்சமாக 1,895 ரூபாயும் வசூலிக்கப்படும். சென்னையில் இருந்து நெல்லை செல்ல ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சம் 1,960 ரூபாயும் அதிகபட்சமாக 3,268 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

சென்னையிலிருந்து மதுரை செல்ல ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சமாக 1,688 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 2,254 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்சமாக 2,211 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 3,775 ரூபாய் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்