மேட்டூர் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முழு பேருந்தும் எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோயம்புத்தூரிலிருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மேட்டூர் அடுத்துள்ள சாம்பள்ளி பகுதியில் வந்தபோது பேருந்தின் முன் பகுதியில் கரும்புகை வெளியானது. இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை வெளியேறும்படி அறிவுறுத்தினார். உடனடியாகப் பயணிகள் கீழே இறங்கத் தொடங்கினர். அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்புறம் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கருமலைக்கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது. பேருந்தில் இருந்த 43 பயணிகளும் அவசர வழி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்து உயிர் பிழைத்தனர். இந்த விபத்தில் தீயில் சிக்கி 6 பெண்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்து எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் சாம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.