உலகையே அச்சுறுத்திவரும் உருமாறிய கரோனா தற்போது ஒமிக்ரான் என்ற பெயரில் பரவ தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 32 படுக்கை வசதிகளுடன் ஒமிக்ரான் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
அவரைத் தொடர்ந்து, விமானம் மூலம் வந்த மற்றொருவருக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று (10.12.2021) விமானத்தில் வந்த இளைஞர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் ஒமிக்ரான் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த சிறப்பு வார்டு பகுதியில் சிகிச்சை பெற்றுவரக்கூடிய 2 பேருக்கு ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வராத நிலையில், நேற்று கூடுதலாக இருவர் வந்து சேர்ந்துள்ளனர்.