ஈரோடு, சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி ஆழம் கொண்ட பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி அந்தப் பகுதி வழியாக வந்தனர். அப்போது கிணற்றிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. இதை அடுத்து பதறி போய் கிணற்றை பார்த்தபோது வள்ளியம்மாள் கூச்சல் போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வள்ளியம்மாள் கிணற்றில் தவறி விழுந்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதி மக்கள் கிணற்றுக்கருகே ஒன்று திரண்டனர். தீயணைப்பு அலுவலர் கலைச்செல்வம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.