தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொது சோதனை மையங்களை அமைக்கத் தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் ஆளில்லா விமான (ட்ரோன்) பொது சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவில், இத்தகைய சோதனை மையம் கர்நாடக மாநிலம், சித்திரதுர்காவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தனது பயன்பாட்டிற்காக உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களைத் தனித்தனி மையங்களில் சோதனை செய்து வருகின்றன. இது செலவினத்தை அதிகரிப்பதோடு. சோதனைகளை மேற்கொள்ளக் காலதாமதமும் ஆகின்றது. இந்த இடர்பாடுகளைக் களையும் நோக்கத்துடன் மத்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க டிட்கோ (TIDCO) நிறுவனம் திட்டமிட்டது.
இதையொட்டி மத்திய அரசின் மானியத்துடன் செயல்படும் இத்திட்டத்தைச் செயல்படுத்த நான்கு நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து ரூ. 45 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க உள்ளன. இந்த சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்திலேயே சர்வதேச தரத்தில் வழங்கும். இந்த சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.