கடலூரில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டி மீது உழவு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது சின்ன கோட்டிமுளை எனும் கிராமம். இந்த கிராமத்தில் சம்பத் என்பவரின் விளைநிலத்தில் சோளம் பயிரிடப்பட்டிருந்தது. இன்று சோளக் கருது அறுக்கும் பணி நடைபெற்றது. இதற்காக பல்வேறு கூலித் தொழிலாளிகள் வந்திருந்தனர். அன்பழகி என்ற மூதாட்டி ஒருவரும் சோளக்கருது அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது சம்பத், டிராக்டர் ஒன்றை உழவு பணிக்காக ஈடுபடுத்தியிருந்த நிலையில், எஞ்சினை அணைக்காமல் நிறுத்தி விட்டு சென்று விட்டார். டிராக்டரின் கியர் தானாகவே போடப்பட்டு தாழ்வான பகுதியை நோக்கி டிராக்டரானது இயங்கியது. அப்பொழுது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த அன்பழகி மீது டிராக்டர் மோதியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் விவசாய நிலத்தில் வேலை செய்த அமுதா, கோபிகா உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கம்மாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.